சாலிவாகனசகம் 1834 ஆம் சித்திரைத்திங்கள் (ஏப்ரல், 1911) வெளிவந்த நமது ஆண்டு ஞானசாகர ஆறாம்பதுமத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கஞ்செய்யப்பட்ட யோகநித்திரை என்னும் இவ்வரும்பெருங் கல்விநூல், இடையிடையே பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல வெளிவந்த அதன் ஏழு எட்டு ஒன்பதாம் பதுமங்களில் தொடர்பாக எழுதப்பட்டு, இப்போது நடைபெறும் ஞானசாகரப் பத்தாம் பதுமத்தின் 6, 7 ஆம் இதழ்களில் முற்றுப் பெறுவிக்கப்பட்டது. ஆகவே, இந்நூல் முற்றுப் பெறுதற்குப் பதினோராண்டுகள் ஆயினவென்று அறிதல் வேண்டும். இவ்வாறு இது மெல்ல மெல்ல எழுதப்பட்டதனால், சென்ற இருபதாண்டுகளாக இக் கலைத்திறத்தைப் பற்றிய பல நூல் ஆராய்ச்சிகளிற் கண்ட முடிபுகளும், பல்லாண்டுகளாக இடையிடையே ஆழநினைந்து பார்த்துத் தெளிந்த நுணுக்கங்களும், இதிற் சொல்லப்பட்ட முறைகளை நேரே செய்துபார்த்து அறிந்த மெய்ப் பயன்களும் இதன்கண் இயன்றமட்டும் நன்கெடுத்துக் காட்டி விளக்க இடம் பெற்றோம். இந்நூலின் முற்பகுதிகள் பல்லாண்டுகட்கு முன்னரே வெளிவந்தனவாகலின், அவற்றின்கண் உள்ள சிற்சில வடசொற்களையுங்களைந்து தமிழ்ச் சொற் பெய்து பதிப்பிடுதற்கு இப்போது நமக்கு இடம் வாய்க்கவில்லை. இந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவை முற்றக் களைந்து முழுதுந் தூய தமிழாக்கப் படும்.
Yoganithirai Allathu Arithuyil by Maraimalai Adikalar
Estimated delivery 2-3 weeks